பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, July 13, 2004

கல்வி முறை மாற வேண்டும்!

கல்வி முறை மாற வேண்டும்! மாற வேண்டும்! என்று பலர் சொன்னாலும், எழுதினாலும் யாரும் கவனிப்பதாகத் தெரியவில்லை. எதற்கு மாற்றம் தேவையோ இல்லையோ, மேல்நிலைப் பள்ளிக்கல்விமுறைக்கு மாற்றம் தேவை. ஏனென்றால் மேல்நிலைக் கல்வி, தொழில் சார்ந்த கல்வியின் வாசல். 10ம் வகுப்பு வரை நன்றாகப் படிக்கும் மாணவர்கள் மேல்நிலை வகுப்பில் சரியாக படிப்பதில்லை. 10ம் வகுப்பில் கணக்கில் 100 வாங்கிய மாணவர்கள் பலர் 11ம் வகுப்பில் கணக்கில் பெயிலாவது உண்டு. இதற்கு என்ன காரணம்? அந்த மாணவர்கள் திறமையில்லாதவர்களா? இதற்கு காரணம் 10ம் வகுப்பு வரை உள்ள பாடங்கள் எளிதாக புரிந்து கொள்ளக் கூடியவை. சில எளிய உதாரணங்களைக் கொண்டு விளங்கக் கூடியவை. 11ல் இருந்து பாடங்கள் எளிய உதாரணங்களால் விளங்காது. கொஞ்சம் கற்பனா சக்தி இருந்தால்தான் புரிந்துகொள்ள முடியும். அதற்காக இந்த பாடங்களை விட்டு விட முடியுமா? அவற்றையும் எளிதாக்குவதற்கு பாடத்திட்டத்தில் பிராக்டிகள் வகுப்புகள் இருக்கிறது. இதுவும் சரியான வழி முறைதான். பின் எங்கே தவறு? பாடத்திட்டம் சரியானதுதான். ஆனால் அதை மாணவர்களிடம் கொண்டு செல்லும் முறை? முதலாவதாக அவற்றை கொண்டு சேர்க்கும் ஆசிரியர்களே(பெருவாரியான) , அந்த பாடங்களை சரியாக புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்கு புரிந்தால்தானே மாணவர்களுக்கு புரிய வைப்பதைப் பற்றி யோசிக்க முடியும். அவர்களைப் பொறுத்தவரை கல்வி முறை என்பது மாணவர்களை பாடத்தை மனப்பாடம் செய்ய வைத்து, தேர்வு எழுத வைப்பது. அடுத்ததாக கல்வி என்பது தேர்வுக்கான படிப்பு மட்டுமே என்று ஆகிவிட்டது. தேர்வில் கேட்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் கேள்விகளை மட்டும் படித்தால் போதுமானது என்ற எண்ணம் எல்லோர் மத்தியிலும் பரவி விட்டது. அது போன்ற கேள்விகளை இனங்கண்டு, மாணவர்களை படிக்க(?) செய்வதில் பல ஆசிரியர்கள் கில்லாடிகள். இதனால் படிப்பை மதிப்பிடத் தேர்வு என்ற நிலை மாறி தேர்வுக்காகப் படிப்பு என்று ஆகிவிட்டது. அடுத்தக் கூத்து தேர்வுத்தாள் திருத்துவது. வெகு சிலரே விடைகளைச் சரியாக மதிப்பிடுகின்றனர். பலர் விடைகளைச் சரியாக வாசிப்பது கிடையாது. 'ஒவ்வொன்றையும் வாசித்து திருத்தினால், ஒரு நாளைக்கு பத்து விடைத்தாள்கள் கூட திருத்த முடியாது', என்று காரணம் கூறுவார்கள். அது போக அவர்களின் வீட்டு, வெளிக் கோபங்களை வேறு விடைத்தாள்களில்தான் காட்டுவார்கள். இதையெல்லாம் மீறி ஒரு மாணவன் ஸ்டேட் ராங்க் வாங்குவது பெரிய அதிர்ஷ்டம்!?!?! இப்படி வழங்கப்பட்ட மதிப்பெண்களைக் கொண்டுதான் ஒரு மாணவனின் புத்திசாலித்தனத்தை சமூகம் மதிப்பிடுகிறது. இதனால் சமுதாயத்திற்குத்தான் நஷ்டம். பல புத்திசாலிகளை இழக்கிறது. இவையெல்லாம் ஒட்டு மொத்தமாக ஒரே நாளில் மாறி விடாது, மாற்றவும் முடியாது. ஆனால் அரசாங்கம் சரியானபடி திட்டமிட்டால், ஆசிரியர்களும் அவர்களின் சமூக பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால், நல்லது சீக்கிரம் நடக்கும். - மகேசன் இரா.

0 Comments: