பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, May 14, 2004

தேர்தல் 2004 படம் (பாடம் ?)

கதை
இந்தியா முழுவதும் உள்ள பல லொக்கேஷனில் கடந்த இரண்டு மாத காலம் எடுக்கப்பட்ட படம் கடைசியாக நேற்று இனிதே முடிவடைந்தது. ஹீரோவாக வாஜ்பாய்; ஹீரோயினாக (இத்தாலிய இறக்குமதி) சோனியாவும் நடித்துள்ளார்கள். கதை ரொம்ப சிம்பிள் - டில்லிக்கு யார் போக வேண்டும் என்று ஹீரோவும், ஹீரோயினும் போட்டி போடுகிறார்கள். கடைசியாக ஹீரோயினே வெற்றி பெறுகிறார்.

வசனம்
படத்தில் ஹீரோவுக்காக ஜெயலலிதாவும், நாயுடுவும்; ஹீரோயினுக்காக கலைஞரும், ராமதாஸும் வசனம் எழுதியுள்ளார்கள். ஹீரோவுக்காக எழுதிய வசனம் கீறல் விழுந்த ரிக்கார்ட் போல் திரும்பதிரும்ப ஒரே வாசகத்தை (வெளிநாட்டவர்) சொன்னதால் பல இடங்களில் மக்கள் முகம் சுளிப்பதை பார்க்க முடிகிறது.

சுவையான காட்சிகள்
1. படத்தில் ஒரு சீனில் ஹீரோ (பாக்கிஸ்தானுக்கு) நேசக்கரம் நீட்டுகிறார் (கிராபிக்ஸ் மூலம் அழகாக காமித்திருக்கிறார்கள்) நீட்டியவுடன் மறு முனையில் அவருக்கு அல்வா குடுக்கப்படுகிறது. அல்வாவை சாப்பிட்ட ஹீரோ மீண்டும் நேசக்கரம் நீட்டுகிறார்.

2. ஹீரோயின் வீட்டு குடும்பச் சண்டை படத்துக்கு பிளஸ் பாயிண்ட்.

Behind the Scenes
ஷுட்டிங் போது லைட் அடித்தால் "ஆகா ஒளிர்கிறது" என்று ஹீரோ அடிக்கடி சொல்கிறார். இது யாருக்கும் ஏன் இன்று புரியவில்லை.

காமெடி
படத்தில் காமெடி நடிகராக ஜக்குபாய் பாத்திரம் ஏற்று பிரபல தமிழ் சூப்பர் ஸ்டார் நடித்துள்ளார். இவர் தனது பெயரிலும் (ஜக்குபாய்) ஹீரோ பெயரிலும் (வாஜ்பாய்) 'பாய்' என்று முடிவதால், ஹீரோவுக்கு ஆதரவாக நடித்துள்ளார். இவருக்கு வசனம் எழுதியது யார் என்பது ஒரு புதிராகவே இருக்கிறது. இவர் படத்தில் வந்தாலே பலத்த சிரிப்பொலி எழுகிறது. இதனால் இவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று எண்ண தோன்றுகிறது.

கடைசி செய்தி
படம் பார்க்க வந்தவர்கள் தங்கள் பெயர் பட்டியலில் இடம் பெறாததால் பட டிக்கெட் கிடைக்காமல் ஏமாந்தார்கள். டிக்கெட் கிடைத்தவர்கள் படம் பார்த்தவுடன் ஏமாந்தார்கள். இது போன்ற படம் திரும்பவும் 5 வருடத்திற்கு பிறகு மிண்டும் எடுக்கப்படும்.

ஹீரோயினுக்கு இட்லிவடை சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்.

0 Comments: