பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, May 20, 2004

நிரந்தர முதல்வர் ஆக ஜெ'க்கு டாப் 10+4 அறிவுரைகள்.

1. இந்தியாவை யார் ஆண்டால் உங்களுக்கு என்ன ?
'100 கோடி பேரில் ஒருவருக்கு கூட பிரதமர் பதவிக்கு தகுதி இல்லை' என்று தானே சோனியாவுக்கு வாக்களித்துள்ளனர். கூட்டணி தர்மத்தை நீங்கள் இன்னமும் நன்றாக கற்க வேண்டும்.

2. பத்திரிக்கை என்பது மிகப் பெரிய ஆயுதம். அவர்களை அவ்வப்போது கூப்பிட்டு பிஸ்கேட், காப்பி குடுங்கள், ஏதாவது பேசுங்கள். அவர்களும் வியாபாரம் தானே செய்கிறார்கள். அவர்களை ஏன் பகைத்துக்கொள்கிறிர்கள். எதையாவது எழுதிவிட்டு போகட்டுமே! வரம்பு மீறினால், "நான் அடித்தால் நீ தாங்க மாட்டே" என்று கூறுங்கள், சும்மா இருந்துவிடுவார்கள். அதை விட்டு விட்டு கோர்ட் கேஸ் என்று போகாதீர்கள்.

3. 'தீவிரவாத ஆதரவுப் பிரசாரம் தப்பில்லை' என்று பொடா மறு ஆய்வுக் குழு தெரிவித்திருக்கிறது. அதனால், தமிழ் நாட்டில் யார் வேண்டுமானாலும் விடுதலைப் புலி ஆதரவு பிரசாரம் செய்யட்டும். காங்கிரஸ் கட்சிக் காரர்களே சும்மா இருக்கும் போது உங்களுக்கு எதற்கு வீனா பொல்லாப்பு. பொடா கைது நடவடிக்கைகளை விட்டு விடுங்கள். பொடா கேஸை எல்லாம் வாப்பஸ் வாங்கி விடுங்கள்.

4. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வருடத்துக்கு ஒரு முறை வேலை நிறுத்தம் செய்வார்கள் அதை நீங்கள் தடுக்கலாமா ? அரசாங்க ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கவுன்சிலிங் மூலம் இடமாற்றம் என்ற செய்கையை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் லட்சக்கணக்கில் கையூட்டு கொடுத்து லஞ்சத்தை ஊக்குவித்து அவர்கள் விரும்பிய இடத்துக்கு மாற்றம் பெற தயாராக இருக்கும்போது, நீங்கள் இதைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும் ? அவர்கள் அடிக்கடி கேண்டீன் சென்று டீ,காபி குடித்தால்தான் சுறுசுறுப்பாக இருப்பார்கள். ஏதோ ஆபிசுக்கு வருகிறார்களே என்று சந்தோஷப்படிங்கள்.உங்களுக்கு ஏன் பொதுமக்கள் மீது அக்கறை ?

5. ரவுடிகள் விஷயத்தில் ஏன் நீங்கள் இவ்வளவு கடுமையைக் காட்டுகிறீர்கள். அவர்களும் தங்கள் தொழிலை செய்து விட்டுப் போகட்டுமே... எதிர்காலத்தில் நீங்கள் கூட இது மாதிரி வேட்பாளர்களை தேர்வு செய்யலாம். (வெங்கடேச பண்ணையாரின் மனைவி ராதிகா செல்வி வெற்றி பெற்றிருக்கிறார்)

6. மழை நீர் சேகரிப்புக்கு நீங்கள் இவ்வளவு முனைப்பு காட்டியிருக்க வேண்டியதில்லை. தண்ணீர் பிரச்னையை தயாநிதி மாறனிடமும், டி.ஆர்.பாலுவிடம் விட்டு விடுங்கள். அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். நீங்கள் தமிழை செம்மொழியாக்க வேண்டும் போன்ற மிகமுக்கிய பிரச்சனையை கையில் எடுங்கள்

7. இலவச மின்சாரத்தை ஏன் ரத்து செய்தீர்கள்? முடிந்த மட்டும் அவர்களுக்கு இலவசமாக மின்சாரத்தை விவசாயத்துக்கும், ஏன் வீட்டுக்கும் கூட கொடுங்கள். மேலும் அவர்களுக்கு தேவையான விதை, உரம், மோட்டார் பம்ப் மற்றும் கால்நடைகள், டிராக்டர் முதலியவைகளை இலவசமாக கொடுக்க வேண்டும்.

8. இந்துக்கள் அனைவரும் திருடர்கள் என்ற படத்தை கருணாநிதி கொடுக்க, இந்துக்களும் அதை சந்தோஷத்துடன் ஏற்றுக் கொண்டனர். கட்டாயமதமாற்றத் தடைச் சட்டம் பற்றி உங்களுக்கேன் வீண் கவலை.
அதை மக்கள் ஏற்கவில்லை, வாபஸ் பெற்றீர்கள். அதே போல் கோயில் பராமரிப்பு, அன்னதானம் முதலியவற்றையும் வாபஸ் பெற்று விடுங்கள்.

9. காவிரி நீர் சம்பந்தமான ஒப்பந்தம் புதுப்பிக்காமல், காங்கிரஸ் அரசுக்கு நன்மை செய்வதற்காக கர்நாடகம் எவ்வளவு அணைகளை வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளட்டும் என்று, பதிவு செய்யப்பட்ட வழக்கை வாபஸ் வாங்கி, தமிழ் நாட்டுக்கு கருணாநிதி நன்மை செய்யவில்லையா? அந்த ராஜதந்திரம் உங்களிடம் இல்லையே ஏன்? இனியாவது அவர்களிடம் கெஞ்சி தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் வாங்கிக் கொடுங்கள். தமிழனுக்கு தன்மான உணர்ச்சி எதற்கு?

10. லாட்டரி சீட்டு ஒழிப்பு மிகவும் மக்கள் விரோத செய்கை. லாட்டரி சீட்டால் எவ்வளவு பேர் கோடீஸ்வரர் ஆயினர் தெரியுமா? சாமானிய மக்கள் சம்பாதித்த பணத்தை அவர்களே இழக்க தயாராக இருக்கும்போது, அதை நீங்கள் ஏன் தடுத்தீர்கள். அதை மீண்டும் கொண்டு வாருங்கள். அடித்தட்டு மக்கள் நாசமாய் போனால் தங்களுக்கு என்ன?

11. "எச்' முத்திரையை ரத்து செய்தீர்கள். நல்லது. அரசு மானியத்தில் அனைவருக்கும் வீட்டுக்கு வேண்டிய மளிகை சாமான்கள் மற்றும் அனைத்து பொருட்களையும் கொடுங்கள். இடைத்தரகர்களும் மற்றவர்களும் பிழைப்பதை நீங்கள் ஏன் தடுக்க வேண்டும் அரசு ரெவின்யூ குறைந்தால் குறைந்துவிட்டுப் போகட்டுமே!

12. பச்சோந்திகள், மரம் வெட்டிகள் என்ற பெயர் எடுத்தாலும் அவர்களுக்கும் ஓட்டு வங்கி உண்டு. அதுபோல விடுதலைப் புலிகள் ஆதரவு ம.தி.மு.க., தனித்தனி வழியில் செல்லும் காங்கிரஸ், தொழிலாளர்களை குழப்பும் கம்யூனிஸ்ட்டுகள் ஆகியவர்களுக்கும் ஓட்டு வங்கி உண்டு. அவர்களையும் ஆதரிக்கும் மக்கள் உண்டு. எனவே, உங்களுக்கு கொள்கை தேவையில்லை. அடுத்த முறை இவர்களை சேர்த்தால் வெல்வது நீங்கள் தான். சிம்பிள் கூட்டணி அரித்மெடிக் தெரிந்துகொள்ளுங்கள்.

13. "டாஸ்மாக்' மூலம் மது விற்பனையை அரசு எடுத்தது மிகவும் தவறல்லவா! இதன் மூலம் கொள்ளையடித்த மதுக்கடை ஏலதாரர்களும், போலி மது விற்பனையாளர்களுக்கும் இடிப்பு ஏற்பட்டு விட்டதே. அதனால் தான் பொதுமக்கள் கவலைப்படுகின்றனர். இதுபோல தான் மணல் விற்பனையையும் கவலைப்படாமல் மீண்டும் தனியாருக்கு விட்டு விடுங்கள். சில கட்சி ஆட்கள் பிழைப்பு நடத்த வேண்டாமா ?

14. மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸுடன், இலவச சினிமா டிக்கேட்டும் குடுங்கள், உங்களுக்கு
கூடுதல் செல்வாக்கு கிடைக்கும்.

முடிந்த வரை சிலவற்றை செய்திருக்கிறீர்கள். ஏன் இதற்கு மேலும் ஒரு பெரிய 'U' Turn அடியுங்கள். நிச்சயம் நீங்கள் தான் தமிழகத்தின் நிரந்தர முதல்வர்.

கார்ட்டூன் உதவி: Shekhar Gurera, நன்றி: http://www.shekhargurera.com/

0 Comments: