பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, August 18, 2014

தோனி பதவி விலகுகிறார்

இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டி தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதற்கு பொறுப்பேற்று கேப்டன் மகேந்திர சிங் தோனி பதவி விலகக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளன.
தோனிக்கு இந்த தண்டனை குறைவு. அவருக்கு அதிகபட்ச தண்டனையாக அஞ்சானை இரண்டு முறை பார்க்க வைக்க வேண்டும்.

Read More...

Monday, August 11, 2014

நம்பெருமாளுடன் ஒரு நாள் - எ.அ.பாலாஸ்ரீரங்கம் சென்று பல ஆண்டுகள் ஆகிவிட்டதை யோசித்து.... ஒரு நாள் பயணமாக ஸ்ரீரங்கம் செல்லலாம் என்று எடுத்த திடீர் முடிவின் காரணமாக, குடும்ப சகிதம் வெள்ளி (8.8.2014) அன்று காலையில், எப்போதும் போல லேட்டாகச் செல்லும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸில் ஸ்ரீரங்கம் போய்ச் சேர்ந்தேன். ஹோட்டல் அறையின் பால்கனியிலிருந்து ரம்யமான ராஜ கோபுர தரிசனமும், முரளி காபிக்கடையின் ஃபில்டர் காபியும் புத்துணர்ச்சி அளிப்பதாய் இருந்தன.
வைணவ பாரம்பரித்தில், கோயில் என்று பொதுவாகக் கூறினால், அது ஸ்ரீரங்கத்தையே குறிப்பிடுவதாகும். அழகிய மணவாளன், அரங்கன் என்றழைக்கப்படும் அரங்கமாநகருளானுக்கு “நம்பெருமாள்” என்ற பெயர் வந்ததற்கு ஒரு சுவையான காரணக்கதையை Jsri யின் வலைத்தளத்தில் (http://mykitchenpitch.wordpress.com) கண்டேன். அதன் சுருக்கம்:ஸ்ரீரங்கத்தில் அயலாரின் படையெடுப்புக்கு (அப்போது தில்லி சுல்தான்) பயந்து, ஒளித்து திருமலைக்கு எடுத்துப்போன அரங்கன் விக்ரகத்தை 60 வருடங்கள் கழித்தே மீட்டு எடுத்து வந்தார்கள். அதுவரை வேறு ஒரு உத்சவமூர்த்தியை பிரதிஷ்டை செய்து வழிபாடுகள் நடந்துவந்தன. காணமல் போன அரங்கன் சிலை பற்றி அறிந்தவர்கள் யாருமே உயிருடன் அப்போது இல்லாமல் போனதால், திரும்பி வந்த விக்ரகஹத்தை அசல் என்று பலரும் ஏற்க மறுத்தனர். ஆனால், எப்போதோ காணாமல் போன ரங்கநாயகித் தாயாரின் விக்ரஹம், 60 வருடங்கள் கழித்து திருமலையிலிருந்து அரங்கன் விக்ரகம் திரும்பி வந்த அதே சமயத்தில், கிடைத்து விட, ஸ்ரீரங்கம் திரும்பிய உத்சவர் தான் அசல் அரங்கனோ என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டு விடுகிறது!

அரங்கன் விக்ரஹம் திருமலை செல்வதற்கு முன், அரங்கனின் ஆடைகளை சலவை செய்து வந்த, பின்னர் கண்பார்வை இழந்த 93 வயது வண்ணான் ஒருவர் இன்னும் உயிருடன் இருப்பது தெரியவருகிறது. அவரை அழைத்து விசாரித்ததில், அவர் கூறிய விக்ரஹ அடையாளங்கள் ஒத்துப் போனது. மேலும் அவர் தன்னால் அபிஷேக (திருமஞ்சன) தீர்த்தத்தை ருசித்து இனம் காணமுடியும் என்று சொல்ல, பழைய/புதிய உத்சவமூர்த்திகளின் அபிஷேக தீர்த்தமும் (ஈரவாடை என்று கூறுவர்) அவருக்கு அளிக்கப்படுகிறது. திருமலையிலிருந்து மீண்டு வந்த அரங்கனின் தீர்த்தத்தை அருந்திய அச்சலவைத்தொழிலாளி, ‘ இவரே நம் பெருமாள், இவரே நம் பெருமாள்! ’ என மகிழ்ச்சியில் கூவ, ‘நம்பெருமாள்’ என்ற பெயர் அரங்கனுக்கு நிலைத்தது. ஈரத்தமிழில் திருவாய்மொழி அருளிய காரிமாறப்பிரானை வாஞ்சையோடு “நம் ஆழ்வார்” என்று நாம் அழைப்பதில்லையா!

ஸ்ரீரங்கம் கோயில் 7 பிரகாரங்கள் கொண்ட பிரம்மாண்டமான கோயில். 108 வைணவ திருப்பதிகளில் முதன்மையானது. 10 ஆழ்வார்களால் (except மதுரகவி & தொண்டரடிப்பொடியாழ்வார்) பாடல் பெற்றது திருவேங்கடம் எனப்படும் திருமலையும், திருப்பாற்கடலும். ஆனால், 11 ஆழ்வார்களால் (except மதுரகவியாழ்வார் – இவர் தன் ஆச்சார்யன் நம்மாழ்வார் பற்றி மட்டுமே பாடியுள்ளார் -கண்ணிநுண் சிறுத்தாம்பு) பாடல் பெற்ற ஒரே திவ்யதேசம் திருவரங்கம் மட்டுமே! 247 பிரபந்தப் பாசுரங்களில் ஸ்ரீரங்கம் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.

ஆராத அருளமுதம் பொதிந்த கோயில்
அம்புயத்தோன் அயோத்தி மன்னற் களித்த கோயில்
தோலாத தனிவீரன் தொழுத கோயில்
துணையான வீடணற்குத் துணையாங் கோயில்
சேராத பயனல்லாஞ் சேர்க்குங் கோயில்
செழுமறையின் முதலெழுத்து சேர்ந்த கோயில்
தீராத வினையனைத்தும் தீர்க்கும்கோயில்
திருவரங்க மெனத் திகழுங்கோயில் தானே!

என்று தன்னுடைய அதிகார ஸங்க்ரஹம் என்ற நூலில் ஸ்ரீரங்கத்தைப் பற்றி (பாகவத சிம்மம் என்று போற்றப்பட்ட) சுவாமி வேதாந்த தேசிகன் குறிப்பிடுகிறார்.

நம்மாழ்வார் திருவாய்மொழியில் அருளிய ”கங்குலும் பகலும் கண் துயிலறியாள்” பதிகமும், திருப்பாணாழ்வார் அருளிய அமலனாதிப்பிரான் (10) பாசுரங்களும், தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருமாலைப்பாசுரங்களும் எனக்குப் பிடித்தவை. தொண்டரடிப்பொடியின் இப்பாசுரம் கல்லையும் கரைக்க வல்லது!

ஊரிலே காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை
பாரில் நின் பாதமூலம் பற்றிலேன் பரமமூர்த்தி
காரொளி வண்ணனே (என்) கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர் களைகண் அம்மா, அரங்கமாநகருளானே!

பெரியாழ்வாரின் பாசுர முத்து ஒன்று:

கன்னி நன் மாமதிள் சூழ்தரு* பூம்பொழில் காவிரித் தென்னரங்கம்*
மன்னியசீர் மதுசூதனா! கேசவா!* பாவியேன்வாழ்வுகந்து*
உன்னை இளங்கன்று மேய்க்கச்* சிறுகாலேயூட்டி ஒருப்படுத்தேன்*
என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை* என் குட்டனே முத்தம் தா.

நாச்சியார் திருமொழியிலிருந்து:: அரங்கன் தன் முகத்தை கூட ஏறிட்டுப்பார்க்காமல் சேஷசயனத்தில் இருப்பதைக் கூறி நாச்சியார் ’புலம்புவதாக’ கீழுள்ள ஆண்டாள் பாசுரம் அமைந்துள்ளது :) இங்கு சங்கம் என்பதற்கு அரங்கனின் கைச்சங்கு என்றும், கைவளையல் என்றும் இரு பொருள்கள் உண்டு. “அம்மனே” வுக்கு ”அந்தோ” என்று பொருள் கொள்ளவேண்டும்

தாம் உகக்கும் தம் கையிற் சங்கமே போலாவோ
யாம் உகக்கும் எம் கையில் சங்கமும்? ஏந்திழையீர்
தீ முகத்து நாகணைமேல் சேரும் திருவரங்கர்
ஆ முகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே

அடுத்து சேரமன்னனாக விளங்கிய குலசேகர ஆழ்வாரின், பேரன்பும், பெரும்பக்தியும் இப்பாசுரங்களில் எவ்வளவு அழகாக வெளிப்படுகிறது, பாருங்கள்:

ஆதி அந்தம் அனந்தம் அற்புதம் ஆன வானவர் தம்பிரான்
பாத மாமலர் சூடும் பத்தி இலாத பாவிகள் உய்ந்திடத்
தீதில் நன்னெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே
காதல் செய் தொண்டர்க்கு எப்பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சமே

கோல் ஆர்ந்த நெடுஞ்சார்ங்கம் கூனற் சங்கம்
கொலையாழி கொடுந்தண்டு கொற்ற ஒள் வாள்
கால் ஆர்ந்த கதிக் கருடன் என்னும் வென்றிக்
கடும்பறவை இவை அனைத்தும் புறஞ்சூழ் காப்ப
சேல் ஆர்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த
திருவரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்
மாலோனைக் கண்டு இன்பக் கலவி எய்தி
வல்வினையேன் என்றுகொலோ வாழும் நாளே

கோயில் உள்/வெளிப் பிரகாரங்களில் பல சன்னதிகள் உள்ளன. செங்கமலவல்லித்தாயார், சக்கரத்தாழ்வார், பட்டாபிராமன், நுணுக்கமாக செதுக்கப்பட்ட. பிரம்மாண்டமான கருடாழ்வார், வாசுதேவன், மீசை வைத்த பார்த்தசாரதி, சுவாமி தேசிகர், தன்வந்திரி, ரங்கநாயகித் தாயாருக்குத் தனியாக என்று இப்படிப் பல. கோயில் விமானத்தில் மிக அழகான பரவாசுதேவர் கோலத்தை படத்தில் காணலாம்.


இங்குள்ள ராமானுஜரின் தனிச்சன்னதியில் அவரது “தான் ஆன” திருமேனியை தரிசிக்கலாம். அமர்ந்த நிலையில் உள்ள ராமானுஜரின் சிலைக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) கிடையாது. ஆண்டுக்கு 2 தடவை (ஐப்பசி,சித்திரை), பச்சைக்கற்பூரமும், குங்குமப்பூவும் கலந்து திருமேனியில் சாற்றுவது வழக்கம். அவரது ”தமர் உகந்த” திருமேனியை மேல்கோட்டை என்ற திருநாராயணபுரத்திலும் ”தானுகந்த” திருமேனியை ஸ்ரீபெரும்புதூரிலும் தரிசிக்கலாம். பெருமாளின் துயிலணையாக விளங்கும் ஆதிசேஷனின் அவதாரங்களாக லட்சுமணன், பலராமன், ராமானுஜர் ஆகியோரைக் குறிப்பிடப்படுவர்.மேலும் தகவல்களுக்கு:

எந்தை இராமானுச முனியை (எம்பெருமானார், யதிராசர், பாஷ்யகாரர், உடையவர், இளையாழ்வார் என்ற பிற திருநாமங்களும் இவர்க்கு உண்டு) வைணவம் தழைக்க வந்த ஒரு புரட்சித்துறவி என்று தாராளமாக அழைக்கலாம். 1000 ஆண்டுகளுக்கு முன்னமே, சாதி பேதம் பாராமல், வைணவக் கொள்கைகளை கைக்கொண்ட அனைவரும், திராவிட வேதம் எனும் பிரபந்தப் பாசுரங்களை ஓதவும், வைணவ மதச்சின்னங்களை அணியவும், சமாஸ்ரயணம் என்ற சடங்கு வாயிலாக சங்கு சக்கர முத்திரைகளை பதிந்து வைணவத்தைப் பற்றவும், இராமானுசர் வழி ஏற்படுத்தினார். பெருமாள் (திருமால்) மேல் அன்பும், பற்றும், பக்தியும் கொண்டு, அவன் தாள் பற்றி பூரண சரணாகதி மேற்கொள்ளும் அடியவர் அனைவரும் வைணவரே என்பதில் தீவிர நம்பிக்கை கொண்டவர் அண்ணல் இராமானுசர்.

”ரங்கா ரங்கா” கோபுரத்தின் இடது புறம் ஒரு 300 மீ தொலைவில், தெற்கு உத்தரவீதியில் மளவாள மாமுனிகளுக்கு தனிச்சன்னதி ஒன்று அமைந்துள்ளது. திருவாய்மொழிப்பிள்ளையின் சீடரான இவ்வைணவ ஆச்சார்யரன் உபதேச ரத்தினமாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி, ஆர்த்தி பிரபந்தம் ஆகிய கிரந்தங்களை அருளியதுடன் ஆழ்வார்களின் அருளிச்செயல்களுக்கு உரையும் எழுதியுள்ளார்.கூட்டம் குறைவாக இருப்பின், திருவரங்கம் கோயிலை முழுமையாக சுற்றிப்பார்க்க, தரிசிக்க குறைந்தபட்சம் 6 மணி நேரம் ஆகும். நான் சொன்னதற்கு மேல், திருவரங்கம் குறித்த செய்திகள் ஏராளமாக இணையத்தில் கிடைக்கின்றன. ஸ்ரீரங்கத்திற்கு அருகில் இருக்கும் இன்னும் சில கோவில்களுக்கு (கோயிலடி, திருஅன்பில், உத்தமர் கோயில், திருவெள்ளறை, குணசீலம்) சென்று வந்தது பற்றி பிறிதொரு சமயம் எழுதுகிறேன்.

---எ.அ.பாலா

Read More...

Thursday, August 07, 2014

மக்கள் பணம் !


செய்தி 1: குஜராத் மாநில ஆளுனராக கமலா பெனிவால் பதவி வகித்த காலத்தில், தனது விமான பயணத்தில் அவர் முறைகேடு செய்ததாக கடந்த வாரம் குற்றச்சாட்டு எழுந்தது. 2011 ஆம் ஆண்டு முதல் குஜராத் கவர்னராக பதவி வகித்த காலத்தில் அவர் 63 முறை விமானத்தில் சென்றுள்ளார். இதில் தனது சொந்த மாநிலமான ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் நகருக்கு 53 முறையும், டெல்லிக்கு 10 முறையும் அரசு செலவில் அவர் சென்றது தெரியவந்தது. இதற்காக அரசு பணத்தில் 1.5 கோடி ரூபாயை அவர் செலவு செய்துள்ளதாக கவர்னர் மாளிகையின் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.


செய்தி 2: குஜராத் முதல்வர் ஆனந்திபென் பயன்படுத்துவதற்கு ரூ. 100 கோடியில் புதிய விமானம் வாங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
ஷீலா தீட்சித் மீது காமன்வெல்த் விளையாட்டு ஊழல் புகார் எழுந்துள்ளது ஏன் அவரை விட்டு வைத்திருக்கிறது மோடி அரசு ?

Read More...

Thursday, July 24, 2014

லார்ட்ஸ் டெஸ்ட் -இங்கிலாந்தின் சொ.செ.சூ இந்தியாவின் ஏற்றம் -எ.அ.பாலா

28 நீண்ட வருடங்களுக்குப் பின், தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் இவ்வெற்றி, மிகவும் பாராட்டுக்குரியது என்பது அனைவரும் சொல்லும் ஒன்று தான். மிக முக்கியமாக, ஒரு இளம் இந்திய அணியின் முயற்சியால் கிடைத்த வெற்றி என்பதை நினைவு கொள்ள வேண்டும். டிராவிட், சச்சின், லஷ்மண், கங்குலி, சகீர் கான் என்ற ஜாம்பவான்கள் யாரும் இன்றி பெற்ற மகத்தான வெற்றி. 2011-ல் (இந்தியா மோசமாக தோற்ற) லார்ட்ஸ் போட்டியில் பங்கு பெற்ற அணியிலிருந்து தோனி, இஷாந்த் மட்டுமே இப்போது அணியில் உள்ளனர்.

ஏன் சொ.செ.சூ என்றால், இந்த 2வது டெஸ்ட்டில் இங்கிலாந்து தனக்குச் சாதகமான “பச்சை”க்களத்தை தயார் செய்தது, ஆண்டர்சனும், ப்ராடும் (Broad சற்று Fraud-ம் தான்), இந்தியாவை ஒரு வழி பண்ணி விடுவார்கள் என்ற நம்பிக்கையில்! டாஸிலும் வென்று, இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. எதிர்பார்த்தபடி இந்தியாவும் 145-7 என்ற நிலையில் தடுமாறிக்கொண்டிருந்தபோது, ரஹானே (103), புவனேஷ்வர், ஷாமி, இஷாந்த் துணை கொண்டு, வழி நடத்தி, இந்திய ஸ்கோரை இரண்டு மடங்கு ஆக்கியதில், இந்தியா எடுத்த மொத்தம் 295. பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் சொற்ப ரன்கள் அதிகம் எடுத்தும், இந்தியா 2-வது இன்னிங்ஸில் எடுத்த 342 ரன்களும், இஷாந்த்தின் அபார பந்து வீச்சும், இங்கிலாந்தின் எதிர்ப்பை முறியடித்தன.

களமும், ஸ்விங்கும் இருந்த விதத்தை வைத்துப் பார்க்கையில் இங்கிலாந்து முதலில் பேட் செய்திருந்தால், 150-ஐ தாண்டியிருக்காது என்று கூறுவேன். ரஹானேயின் முதல் இன்னிங்ஸ் சதம் அத்தகைய சிறப்பு வாய்ந்தது. இங்கிலாந்துக்கு தோதான ஒரு ஆடுகளத்தில், இந்தியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர், ஷாமி, இஷாந்த் இங்கிலாந்தின் 20 விக்கெட்டுகளில் 15-ஐ கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. அதுவும் 2வது இன்னிங்க்ஸில் வெள்ளைக்காரர்கள் நமக்கெதிராக பொதுவாக பயன்படுத்தும் பவுன்சர் ஆயுதத்தை (தோனியின் பலத்த அறிவுரையின் பேரில்) இஷாந்த் அவர்களுக்கு எதிராக பயன்படுத்தி 7 விக்கெட்டுகளை வீழ்த்தியது அசாதாரணம் என்பதோடு, மனவியல் ரீதியான ஒரு வெற்றியும் கூட!

இந்த லார்ட்ஸ் வெற்றிக்கு (தலைவர் தோனி தவிர்த்து) முக்கியக் காரணமாக குறிப்பிடவேண்டியவர்களாக, ரஹானே, முரளிவிஜய் (வித்தியாசமாக, இவர் பொறுமையின் உச்சமாக காட்சியளித்தது மன நிறைவைத் தந்தது), 2-வது இன்னிங்ஸில் 235/7 என்ற நிலையிலிருந்து இந்தியா 342 அடைய காரணமாக இருந்த ஜடேஜா மற்றும் வெறிபிடித்த வேங்கையாய் இங்கிலாந்தை வேட்டையாடிய இஷாந்த் ஆகியோர் இருந்தாலும், தனது ஆட்டத்தில் பரிமளித்தது மட்டுமன்றி (முதல் இன்னிங்ஸ் 6 விக்கெட்டுகள், 36 முக்கிய ரன்கள், 2-வது இன்னிங்க்ஸ் 52 மிக மிக முக்கிய ரன்கள்) “நம்மால் முடியும் அண்ணா” என்று சக வீரர்களுக்கு ஊக்கமும் அளித்த புவனேஷ்வர் குமார் தான் லார்ட்ஸின் கதாநாயகன் என்பது என் கருத்து.

1986-ஆம் ஆண்டு லார்ட்ஸ் வெற்றிக்கும் இந்த வெற்றிக்கும் சில சுவாரசியமான ஒற்றுமைகள் உள்ளன!

1. அப்போதும், இப்போதும் இந்தியாவின் கேப்டன்கள் உலகக்கோப்பையை ஏற்கனவே வென்றவர்கள் - கபில்தேவ், தோனி
2. அப்போதும், இப்போதும் தனது கடைசி இந்தியத்தொடரை வென்ற, ஓர் இடதுகை ஆட்டக்காரர் இங்கிலாந்தின் கேப்டன் - டேவிட் காவர், அலிஸ்டர் குக்
3. அப்போது ரோஜர் பின்னி, இந்த அணியில் அவர் மகன் ஸ்டூவர்ட் பின்னி
4. அப்போதும், இப்போதும் ஒரு துவக்க ஆட்டக்காரர், சென்னை மண்ணின் மைந்தன் - ஸ்ரீகாந்த், முரளிவிஜய்
5. அப்போதும், இப்போதும் ஒரு மும்பை வீரர் சதமடித்தார்! - வெங்க்சார்க்கர், ரஹானே
6. அப்போதும் ஷர்மா, இப்போதும் ஒரு ஷர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர் - சேத்தன் ஷர்மா, இஷாந்த் ஷர்மா :-)
7. அப்போது ரவி சாஸ்திரியும், இப்போது ஜடேஜாவும் அணியில் ஆல்ரவுண்டராக
8. இறுதியாக, 1986 மற்றும் 2014 இந்த இரண்டு ஆண்டுகளும் repeating வகை, அதாவது, இவ்விரு ஆண்டுகளின் கேலண்டர்களில் எந்த வித்தியாசமும் இருக்காது.

தலைமைச்சுமையால், மிகச்சிறந்த ஆட்டக்காரரான குக் சொதப்புவது பார்க்க பரிதாபமாக உள்ளது. அவர் கேப்டனாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஒரு ஆட்டக்காரராக அவரை இழப்பது இங்கிலாந்துக்கு பேரிழப்பாகவே அமையும். இந்தியாவைப் பொருத்தவரை, இன்னும் 3 டெஸ்ட் ஆட்டங்கள் இருப்பதால், தோனி அணியில் ஒரு complacency வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அடுத்த டெஸ்ட் போட்டிகளுக்கும் இங்கிலாந்து க்ரீன் டாப் களங்களையே தேர்வு செய்யும், அவர்களுக்கு வேறு வழி கிடையாது. அதனால், இந்த 2 டெஸ்ட்களில் அத்தனை சிறப்பாக ஆடாத ஷிகர் தவானும், விராத் கோலியும் பொறுமையாக ஆடி ரன்கள் எடுத்து அணிக்கு வலு சேர்ப்பது மிக அவசியம். அனைவரும் டெஸ்ட் தொடரை இந்தியா இன்னும் வென்றுவிடவில்லை என்பது தெளிவாக நினைவில் இருத்துதல் அவசியமாகிறது.

---எ.அ.பாலா
1986 வருடம் புதன் கிழமையில் ஆரம்பிக்கிறது, 2014 வருடமும் புதன் கிழமையில் ஆரம்பிக்கிறது.

Read More...

Monday, July 21, 2014

வேலையில்லா பட்டதாரி - ஜெயக்குமார்


சவுந்தர்யா ரஜினிகாந்தின் 3 க்குப் பிறகு நான் மிக ரசித்துப்பார்த்த தனுஷ் படம் வேலையில்லா பட்டதாரி.

வேலையில்லா பட்டதாரி படும் சிரமங்களையும், படித்த வேலைக்கே போகவேண்டும் என நினைக்கும் படித்தவர்களுக்கு இன்றிருக்கும் சிரமங்களையும் அருமையாக சொல்லி இருக்கிறார்கள். அத்துடன் அரசாங்க காண்ட்ராக்டுகளில் என்ன நடக்கிறது என்பதையும் சொல்லிச் சென்றிருக்கின்றனர் தனுஷ்

தயாரிப்பும் தனுஷ்தான். நடிப்பதற்கு சிரமப்பட்டதாகவே தெரியாத மிக இயல்பான நடிப்பு. கொஞ்சம்கூட அலட்டாத அதே சமயம் நம் வீடுகளில், நட்புகளில் நடக்கும் காமெடி என்பதால் சும்மா ஊதித்தள்ளுகிறார்.
வீட்டுல தண்டமாத்தான இருக்க எனச் சொல்லி அவருக்கு சொல்லப்படும் வேலைகளாக ஞாயிறு கறி வாங்கிவரச் சொல்வது, தம்பியின் வண்டியை துடைத்து வைக்க, இப்படியாக.

அவரின் அந்தக்கால சைக்கிள் மொபெட்டை வைத்துக்கொண்டு அவர் அடிக்கும் காமெடி
தம்பியுடன் ஒப்பிடும் அப்பாவிடம் சண்டைபோடும் இடத்தில் நடக்கும் காமெடிகள், அவனுக்கு மட்டும் ஹீரோ பேரு கார்த்திக்குனு வச்சீங்க, எனக்கு மட்டும் வில்லன் பேரு ரகுவரன்னுதான வச்சீங்க என சீரியஸாய் கேட்பதும் அடியாட்களிடம் அடி வாங்கிக்கொண்டு இருக்கும்போது அம்மா சரன்யா அப்பாவேற வீட்ல இல்லாத நேரத்துல இவனுக வந்திருக்காங்க எனச் சொன்னவுடன் ஏம்மா நீயெல்லாம் ஒரு அம்மாவா, அப்பா வீட்டுல இல்லைன்னு மொதல்லையே சொல்லக்கூடாதா எனச் சொல்லிவிட்டு பட்டையைக் கிளப்புவதும் என பல இடங்களில் காமெடியில் கலக்குகிறார்.
பின்னர் படித்த படிப்புக்கான வேலை கிடைப்பதும் அதில் ஒரு பெரிய ப்ராஜக்ட்டுக்கு அவரை பொறுப்பாக்குவதும் அதற்கு வரும் தடைகளை உடைத்து ஜெயிப்பதுமாக மிச்சப்பாதி படம்.இசை அநிருத். ஒரு மாஸ் படத்துக்கான இசையை கலக்கலாக கொடுத்திருக்கிறார். பாடல்கள் எல்லாமே நன்றாய் இருந்தது.
அப்பாவாக சமுத்திரக்கனி, அம்மாவாக சரன்யாவும் கச்சிதமாக நடித்துள்ளனர். சரன்யாவுக்கு அம்மா கேரக்டர் என்பது தினசரி வாழ்க்கைபோல அவ்வளவு இயல்பான நடிப்பு.

அம்மா போன் செய்து எடுக்காமல் இருந்து அதனால் அம்மா இறப்பதற்கு காரனமாய் தான் இருந்ததை நினைத்து அழும் கேரக்டரில் அவர் அழுவதைக் காட்டுவதில்லை. ஆனால், வசனங்களிலேயே மனதைத் தொடுகிறார். அதற்கு அவர் அப்பாவாக வருபவர் தனுஷுக்கு சொல்லும் ஆறுதல் இன்னொரு நல்ல விஷயம்.

இரண்டாம் பாதியில் வரும் விவேக் ஓக்கே. அவரது காலமெல்லாம் முடிந்துவிட்டதற்கான அறிகுறியாகத்தான் தெரிகிறது அவர் நடிப்பெல்லாம்.
வேலையில்லா பட்டதாரிகள் ஃபேஸ்புக் குருப் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை, அதில் படித்து வெளியாகும் மாணவர்களின் எண்ணிக்கை குறித்தும் அவர் பேசுவது இயல்பு மற்றும் நாட்டு நிலவரம். பொறியியல் படித்துவிட்டு கால்செண்டரிலும், சினிமாத்துறையிலுமாக இருப்பவர்கள் குறித்தும் சொல்கிறார்கள்.

வில்லனிடம் தான் சிறு குழந்தையில் இருந்து பட்டப்படிப்பு முடிப்பதுவரை நடந்ததை வரிசையாக சொல்வது கலக்கலான நகைச்சுவை.
வில்லனாக வருபவர் கணக்குக்கு மட்டுமே. மரணமாஸ் படத்தில் ஒரு சப்பை வில்லன். ஓகே ரகம்.
அமலாபால் வழக்கம்போல நல்ல நடிப்பு. அதே அழகான கண்கள். சொல்லிக்கொள்ளும்படி இல்லையெனினும் அவருக்கான பகுதியை நன்றாகவே செய்திருக்கிறார்.

சமுத்திரக்கனியின் நடிப்பும் மிக இயல்பு. வேலைல்லாத இளைஞர்கள் வீட்டில் இவ்வளவு கரிசனம் காட்டப்பட்டாலே நிறையப்பேர் மேலே வந்துவிடுவார்கள்.

சிகரெட்டின் கொடுமை மிக அழகாக காட்டப்படுகிறது. சரன்யாவின் நுரையீரலை எடுத்துப் பொருத்திய ஒரு பெண் அப்பாவுடன் வந்து நன்றி சொல்லும்போது பகீரென்றிருக்கிறது. சிகரெட் குடிக்கும் அனைவருக்கும் நிச்சயம் அந்த காட்சியில் வயிற்றை நிச்சயம் கலக்கி இருக்கும். அதேபோல இன்றைய கல்லூரி செல்லும் பெண்கள் செல்லும் பாதையும் சொல்லாமல் சொல்லப்படுகிறது. குடி, சிகரெட்டெல்லாம் ஆனுக்கு பெண் குறைந்தவர்களில்லை என இந்த விஷயத்தில் போட்டி இடுகிறார்கள்.

குறை என்றெல்லாம் ஏதும் சொல்லிவிட முடியவில்லை. படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை மிக வேகமாகச் செல்கிறது. சிலர் இரண்டாம் பகுதி ஸ்லோ என்பதாக சொல்லி இருந்ததைப் பார்த்தேன். அப்படியெல்லாம் இல்லை. இதைவிட சிறப்பாக எப்படிச் சொல்வதோ?
நிச்சயம் பிஜிஎம்முக்காக தியேட்டரில் பார்க்கவேண்டிய படம்.

தனுஷின் நடிப்பில் இன்னொரு அருமையான படம் வேலையில்லா பட்டதாரி.


Parking at owner's risk மாதிரி இந்த விமர்சனத்தை பார்த்துவிட்டு படம் பார்ப்பது உங்க ரிஸ்க் :-)

Read More...

Friday, July 18, 2014

அரவிந்தன் நீலகண்டன் - நம்பக்கூடாத கடவுள் - ஜெயகுமார்ஆதௌ கீர்த்தனாரம்பத்திலேயிருந்து இன்றுவரைக்குமான ஹிந்துத்வ சிந்தனைகளை தொன்மம், மதம், அரசியல், சமூகம், மானுடம், பிரபஞ்சம் போன்றவைகளுடன் இணைத்து நமக்கு தந்துள்ள அருமையான ஓர் புத்தகம் என நான் அறிமுகம் செய்வேன்.
முதலில் இந்தப்புத்தகம் நமக்குக்காட்டுவது நாம் இன்றுவரை கண்டிராத ஓர் கதவு. இதுவரை வெறும் ஹிந்துவாக, இந்தியனாக இருந்த நாம் இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்கும்போது நம்மைக் குறித்த உண்மையன பெருமையும், நமது தொன்மம் குறித்த மனவிலக்கங்களிலிருந்தும், நமக்கு போலி பகுத்தறிவுவாதிகளால் நம்மீது சுமத்தப்பட்ட குற்ற உணர்சியிலிருந்தும் விடுதலை பெறலாம்.

நமது கலாச்சாரத்துக்கும், பாரம்பரியத்துக்கும் சரித்திரத்துக்கும் , மேலை நாட்டு நாகரீகம் என நம்பப்படும் போலிகளிலிருந்து நாம் எவ்வளவுதூரம் மேம்பட்டவர்களாக இருக்கிறோம் என்பதையும் உணர்ந்து கொள்ள முடியும்.
அதே மேலைநாட்டுக் கலாச்சாரங்களில் இருந்து வந்தவர்களிலும் மனச்சாட்சியுடன் நடந்த, இயற்கையை உணர்ந்த, புதிய உலகை, நம்பிக்கையை, திறப்பைக் கண்டவர்களையும் நமக்கு அறிமுகம் செய்கிறது இந்த புத்தகம்.

கம்யூனிஸம் என்ற சமூகத்தீமை (இது என் நம்பிக்கை) மானுடத்திற்கு ஆற்றிய அளப்பரிய கொடுமைகளையும், மூர்க்கத்தனமான சிந்தனைகளால் எப்படி அறிவியலை எதிர்த்தது என்பதையும், தான் நம்பிய கொள்கைகளே சரி என்ற மமதையில் எப்படி இயற்கையை அடிமையாக்க முயன்றனர் என்பதையும் அதற்கு இயற்கை அளித்த எதிர்வினைகளையும் குளிகையாக்கி தந்துள்ளார்.

பல புத்தகங்களில் நாம் வாசித்து தெளியவேண்டியதை நமக்காக இச்சிறு புத்தகத்தில் மிக அழகாக புரியும் மொழியில் விளக்கியுள்ளார்.
அடிமைவியாபாரம் குறித்த பகுதிகளை படிக்க, படிக்க ஆத்திரமும், கோபமுமே மேலோங்குகிறது. இப்படிப்பட்ட கீழ்த்தரமான சிந்தனைகளுடன், மானுடவிரோதிகளாக இருந்த ஐரோப்பியர்களுக்கு எப்படி உலகை திருத்த எண்ணம் வந்ததோ? மறந்தும் அடிமைகளை மனிதர்களாக கூட நடத்தாமல் இருக்கும் அடிமைகள் இறந்துவிட்டால் கரும்புத்தோட்டத்திற்கு என்ன செய்வது எப்படி ஆட்களை எங்கிருந்து கொண்டுவருவது என்பது பற்றிய சிந்தனைகளில் இருந்தவர்கள்தான் தங்களை உலகை ரட்சிக்க வந்தவர்களாக சொல்லிக்கொண்டவர்கள், சொல்லிக்கொள்கிறவர்கள்.
நமது பாரம்பரிய மருத்துவமுறைகள் எப்படி மேற்குலகால் களவாடப்பட்டது என்பதும், அது எப்படி மீளப்பெறப்பட்டது என்பதும், மேலும் களவாடப்படாமல் தடுக்க இந்தியாவில் இருந்த சுயநலமற்ற மக்கள் எப்படி பாரம்பரிய மருத்துவ பயன்கள் உள்ள பட்டியலை தயாரித்து இந்திய மருத்துவ பயன்களுள்ள செடிகள், மரங்களையும், மருத்துவ முறைகளையும் களவாணித்தனமாக பேடெண்ட் செய்யமுயலும் கார்பரேட் அரக்கர்களிடமிருந்து காப்பாற்றினர் என்பதையும் படிக்கும்போது நம் நாட்டின் மீதான, பாரதத்தாயின் புதல்வர்களின் மீதான நம்பிக்கை கூடுகிறது.
பாரம்பரிய நெல்மணிகளை காப்பாற்றிய ஒருவரை நம் இந்திய அரசாங்கம் எவ்வளவு தூரம் கீழ்மைப்படுத்தியது என்பதையும், கடைசியில் அரசாங்கம் அவரது எதிர்ப்பைச் சமாளிக்க அவரையே பதவியில் இருந்து நீக்கியதும், மீண்டும் அவர் மனம் தளராமல் பாரம்பரிய நெல் சேகரிப்பை தொடர்ந்ததும் அதற்கு ஏற்பட்ட சிக்கல்களையும் படிக்கும்போது நம்மை ஆண்ட காங்கிரஸின் கோர முகம் தெரிகிறது. வெளிநாடுகளின் காலை நக்கிப் பிழைப்பதையும், அவர்களுக்கு அடிமைச்சேவை செய்வதையுமே காங்கிரஸ் 60 ஆண்டுகளாக செய்திருக்கிறது. நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்த கட்சி என்ற பெருமையை வைத்து மக்களை ஏமாற்றி உண்டு கொழுக்கும் கார்ப்பரேட் ரவுடிகளின் அடிமைச்சேவகர்களாகத்தான் இன்றைய காங்கிரஸ் இருந்திருக்கிறது.

இஸ்லாமியர்களை நம்பிச்சென்ற மேற்கு வங்கத்தின் மண்டலையும், அவரை நம்பிச்சென்ற தலித்துகளையும் நினைக்கும்போது பரிதாபம் மேலிடவில்லை. தெரிந்து பாழுங்கினற்றில் விழுந்த ஒருவராகத்தான் நினைக்கத்தோன்றுகிறது. இன்றைக்கு தமிழகத்தில் இருக்கும் தலித்தலைவரும் அதே பாழுங்கினற்றில் விழுந்திருக்கிறார் என்பதற்கு அம்பேத்கர் சிலையை முஸ்லீம் அடிப்படைவாதிகளை திருப்தி செய்வதற்காக அகற்றியதிலிருந்தே நாம் அறியலாம். அன்றைக்கு மண்டலுக்கு ஏற்பட்ட கதியையே தனக்கும், தன்னை நம்பி வருவோர்க்கும் கொடுக்க காத்திருக்கிறார். இன்றைய சொந்த லாபங்கள் அவருக்கு வருங்காலத்தில் ஏற்படப்போகும் பேரழிவை காணும் சக்தியை மறைக்கிறது. நாளை அந்த பேரழிவு நடக்கும்போது எல்லாமே காலம் கடந்துவிட்டிருக்கும். இந்துக்களாக இருப்பதைத்தவிர, இந்துக்களாக இருந்துகொண்டே உரிமைக்கு போரிடுவதைத்தவிர வேறு எந்த வழியும் அவர்களின் பேரழிவுக்கே இட்டுச் செல்லும் என்பதை அம்பேத்கர் உணர்ந்திருக்கிறார்.
அயோத்தி பிரச்சினையில் நம் போலி மதச்சார்பின்மை மகாத்மாக்கள் ஆடிய நாடகங்கள், பொய், புரட்டுகள் எல்லாவற்றையும் ஆதரத்துடன் சொல்கிறது இந்தப் புத்தகம். எனக்கும் பல விஷயங்கள் இதில் புதிதாய் தெரிந்தன.

ஜூராஸிக் பார்க் படத்தில் வரும் வசனத்தை வைத்து செயற்கை மரபனுக்களுடன் உருவாக்கப்பட்ட உணவு தனியங்களின் பயிர்கள் எப்படி சூழலை சமாளிக்க முடியாமல் பலவித நோய்களுக்கு ஆட்பட்டன, பின்னர் அதைச் சமாளிக்க என்னென்ன்ன விஷங்களை மருந்துகள் என்ற பெயரிலும், உரங்கள் என்ற பெயரிலும் இட்டு நம் நிலத்தை பாழாக்கினோம் என விளக்குகிறார். இறுதியில் நாம் டைனோசர்களின் பாதையில் செல்கிறோமா எனக் கேட்கிறார். ஆம் என்பதுதான் பதிலாக இருக்க முடியும். ஆனால், அதை நம்மிடமே விட்டுவிடுகிறார்.
கஜினி முகமதுவையும், ராஜ ராஜ சோழனையும் ஒப்பிட்டு எழுதிய கட்டுரை ஒன்றுபோதும். இந்து தர்மத்தின் பெருமையைச் சொல்ல. எதிரிகளை வென்றாலும் அவர்கள் மதத்தை பரப்ப இடம் கொடுத்த கலாச்சாரம் எங்கே?, எதிரிகளின் சமய சம்பந்தப்பட்ட அனைத்தையும் ஒழித்த இஸ்லாமிய அடிப்படைவாதம் எங்கே? அதன் தொடர்ச்சி இன்றுவரை பாமியான் புத்தரை பீரங்கியால் பிளந்தது, இன்றைக்கு ஈராக்கில் ஷியாக்களின் புனித மசூதிகளையும், கபர்ஸ்தான்களையும் அழிப்பதில் வந்து நிற்பதுவரை சகிப்புத்தன்மைக்கும் எங்களுக்கும் காத தூரம் என்பதை வரலாறு முழுக்க இடைவிடாது சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள், செய்துகான்பித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

காட்டுக்களவாணிகள் என்ற கட்டுரையில் எப்படி ஆதிவாசிகளின் எல்லா நம்பிக்கையையும் மறுத்து அவர்களை கிறிஸ்தவர்களாக்க முனைந்து, அவர்களை ஒடுக்கினார்கள் என்பதையும், பின்னர் அவர்களின் இறைவேசிகள் என்றழைக்கப்படும் ஷாமன்களின் மருத்துவம் சம்பந்தப்பட்ட அனைத்தையும் திருடி அதை கார்ப்பரேட் வணிகமாக்கினர் என்பதையும் சொல்கிறார். அதன் சிறந்த எடுத்துக்காட்டாக நம்மூர் வெங்காய தோசையை ஆனியன் பீட்சா என வெள்ளைக்காரன் மீண்டும் கொண்டுவந்து கொடுத்தால் 3 விலை கூடக்கொடுத்து தின்னும் மனநிலையில் வெள்ளைக்கார பொருட்களின் மீது மோகம் கொண்டலைகிறோம் என்பதையும் சொல்கிறார்.

சகோதரன் என்ற கட்டுரையில் இந்திரா பார்த்தசாரதியின் அவுரங்கசீப் நாடகத்தை முன்வைத்து நாம் வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாமல் இருப்பதையும், வரலாறு முழுக்க ஒருவருகொருவர் காட்டிக்கொடுத்தே காணாமல் போனதையும் சுட்டிக்காட்டுகிறார்.
காடுமிராண்டிச் சடங்காக கருதப்பட்ட தீமிதித்தல் இன்றைக்கு மேலை நாடுகளில் எப்படி பிரச்சினைகளை எதிர்கொள்ள ஒரு பயிற்சியாக பயன்படுத்தப்படுகிறது எனச் சொல்கிறார். நம்மை காட்டுமிராண்டி என சொல்லிவிட்டு அதையே தான் பயன்படுத்துவதன் மூலம் எப்படி நம் கலாச்சாரம் திருடப்படுகிறது என்பதற்கு ஓர் உதாரனமாகக் கொள்ளலாம்.

சதி என்ற அத்தியாயத்தில் எப்படி யூதர்களுக்கு எதிராக போலியாக உருவாக்கப்பட்ட ஒரு புத்தகத்தை வைத்து வெறுப்பை உமிழ்ந்தனர் எனக்காட்டுகிறது. நம் நாட்டிலும் பிராமண சமுதாயத்துக்கு எதிராக திராவிடர்க்கழகம் என்ற பெயரில் இயங்கும் நச்சுக் கும்பல்கள் செய்த செயல்களும் (குடுமி அறுப்பு, பூணூல அறுப்பு) அதன் தலைவரான ராமசாமி நாயக்கர் பாம்பையும், பாப்பானையும் கண்டால் பாம்பை விட்டுவிட்டு பாப்பானை அடி என்று வெறுப்பை உமிழ்ந்ததும் வரலாறு. அவரைத்தான் இன்றைக்கு பகுத்தறிவு பகலவன் என தமிழ்ச்சமூகத்தின் ஒரு சிறு குழு கொண்டாடுகிறது. இதே மேற்குலகாய் இருந்திருந்தால் யூதர்களுக்கு ஏற்பட்ட கதியே பிராமணர்களுக்கும் ஏற்பட்டிருக்கும். ஆனால், இந்து பண்பாட்டின் எதையும் ஆராய்ந்து நோக்கும் தன்மை இப்படிப்பட்ட விஷப்பிரச்சாரத்தை நகைச்சுவையாக எடுத்துகொண்டது. ஆனால், இப்போது மேலும் விஷமான பிரச்சாரங்கள் பிராமணர்கள் மீது நடத்தப்படுவதாக தெரிகிறது. நாசமாப்போறவன் தான் மட்டும் போகாம ஒரு சமூகத்தையே நாசமாக்கிவிட்டுத்தான் ஓய்வார்கள் போல. கிறிஸ்தவ எவாஞ்சலிக்கல் கும்பல்களும், இஸ்லாமிய அடிப்படைவாத கும்பல்களும் இந்தியாவில் நடத்த விரும்புவது இதையே.

இஸ்லாமிய நாடுகளில் இருக்கும் யூத வெறுப்பை நான் நேரடியாக கண்டிருக்கிறேன். அவர்களைப் பற்றி பேச்சு எழுந்தாலே முகத்தில் எழும் வெறுப்பும் அவர்களைப்பற்றி பேசநேர்ந்ததற்காக ஏற்படும் எரிச்சலையும் காணலாம். இஸ்லாமியர்களின் பார்வையில்
ஈரான் – ஈராக் போர் – யூத சதி
ஈராக் – குவைத் போர் – யூத சதி
பஹ்ரெய்னில் குழப்பம் – யூத சதி
எகிப்தில் மக்கள் கொந்தளிப்பு – யூத சதி
சிரியாவில் குழப்பம் – யூத சதி

என இப்படி மத்திய கிழக்கில் நடக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அவர்கள் ஆய்ந்தறிந்த விடை யூத சதி என்பது மட்டுமே. இதுதான் அவர்களின் கையாலாகாத தனத்துக்கும், அவர்களுக்குள் அடித்துக்கொண்டு சாகும்போதும், அவர்களுக்குள்ளும், வெளியிலிருந்தும் வாங்கும் அடிகளுக்கும் அவர்களுக்குள்ளேயே சமாதானம் அடைய இதுதான் பேருதவியாய் இருக்கிறது.

ஒர் அருமையான பொக்கிஷம் இந்நூல் என்பேன். அடிக்கடி நாம் எடுத்து வாசிக்க வேண்டிய புத்தகமும் கூட. எத்தனை காலம் நாம் ஏமாளிகளாய் இருந்திருக்கிறோம் என்பதை தெரிந்துகொள்ளவும், இன்றும் நம்மை ஏமாற்றுவோர் யார் என்பதையும், நமது பாரம்பரியம் என்ன, கலாச்சாரம் என்ன, கடவுள் நம்பிக்கை குறித்த அடிப்படையான கேள்விகள், உலக சரித்திரத்தில் நடந்த கொடும் நிகழ்வுகள் குறித்து வரலாற்றுப்பார்வை என எல்லாவற்றையும் கொண்டு ஆனால் மிகச் சிறிய புத்தகமாக (160 பக்கங்கள்) வந்துள்ளது.
நாம் அனைவரும் வாசிக்க வேண்டிய அருமையான புத்தகம் நம்பக்கூடாத கடவுள்.

புத்தகத்தில் பிடித்த வரிகள்..
“இத்தனைகோடி மக்கள் இருந்தும் முக்கி முக்கி ஒருமெடல்தானே நம்மால் எடுக்க முடிகிறது. ஆனால் சீனாவைப்பார் என நாம் அங்கலாய்க்கலாம். ஆனால் சீனாவின் சுரங்கங்களுக்குள் இறங்கிக் கரியெடுக்கும் தொழிலாளிக்கு இந்திய ஜனநாயகம் என்பது கைக்கெட்டாத தூரத்தில் இருக்கும் உயிர் காக்கும் அமுதம். “

“பிரணவம் பிரம்மத்தின் ஆன்மாவினுடைய ஒலிவடிவம். “அவையே தானேயாய்.. நீக்கமின்றி நிற்குமன்றே” என்கிறது சிவஞான போத சூத்திரம். உயிர்களனைத்தும் நீக்கமற நிற்கும் இறைத்தத்துவம் என்பது பாரத பண்பாட்டுக்குரல்.”
“அறிவியல் அமைப்புகளிடையே சர்வதேச அளவில் அறிவுப்பரிமாற்றம் தேவைதான். ஆனால், அது பரிமாற்றமாக இருக்க வேண்டும். கப்பமாக அல்ல.”

”ஆனால் இணைத்தன்மைகள் இத்துடன் முடிந்துவிடவில்லை. எலி வீஸல் தனது வதை முகாம் நினைவுகளின் நாவலான “இரவு” என்பதில் பைத்தியக்கார மோசே எனும் பாத்திரத்தைக் காட்டுகிறார். அவன், தான் சென்றிருந்த இடங்களில் நாஸிகள் செய்யும் பயங்கரங்களைக்கூறும்போது, அதை நம்பாமல், அந்த வடக்கு ட்ரான்ஸில்வேனிய ஊரின் யூதர்கள், மோசேயைப் பார்த்துச் சிரிக்கிறார்கள். அந்த யூதர்களைப்போலவே 1947க்குமுன்னால் பாக்கிஸ்தானிய சிந்திகள் சிரித்திருக்கக்கூடும், 1971க்கு முன்னால் பங்களாதேஷின் சங்மாக்கள் சிரித்திருக்கக்கூடும்.1988க்கு முன்னால் காஷ்மீர பண்டிட்டுகள் சிரித்திருக்கக்கூடும். 2010ல் இலவச கலர் டீவிகளுக்கு முன்னால் அமர்ந்து தமிழர்கள் சிரிப்பதைப்போல.”


Read More...

Wednesday, July 16, 2014

வே(வெ)ட்டி கேள்வி பதில்கள்.

வேட்டி தமிழரின் பாரம்பரிய உடையா ?

இதில் என்ன சந்தேகம் ? வேட்டி தமிழர்களின் பாரம்பரிய உடையாகும்; அதே போல் இட்லி பாரம்பரிய உணவாகும்.
பெரும்பாலும் வேட்டியை தினமும் யாரும் அணிவதில்லை. ஆனால் இட்லியை பெரும்பாலும் எல்லோரும் காலை சாப்பிடுகிறார்கள்.

வேட்டி கட்டிக்கொண்டு ஏன் ஆபீஸ் போக கூடாது ?

அலுவலகலத்தில் ஏதாவது ஃபேன்ஸி டிரஸ் போட்டி இருந்தால் தாரளமாக கட்டிக்கொண்டு போகலாம்.

வேட்டி ஏன் ஆண்கள் மட்டும் அணிகிறார்கள் ?

வேட்டி இடுப்பை சுற்றி அணிந்து கொள்ளப்படும் ஆடை, பெண்களுக்கு இடுப்பு இல்லாத காரணத்தால் பொதுவாக ஆண்கள் மட்டுமே அணிகிறார்கள் என்று நினைக்கிறேன்.

ஆங்கிலேயர்களை 67 ஆண்டு களுக்கு முன்பே விரட்டிவிட்டோம். அதில் தமிழகத்துக்கு முக்கியப் பங்கு உண்டு. சென்னையில் கிரிக்கெட் கிளப் மட்டுமல்லா மல், ஜிம்கானா, போட்கிளப், எம்சிசி போன்ற கிளப்களிலும் வேட்டி அணிந்து செல்பவர்களை அனுமதிப்பதில்லை என்று சட்டசபையில் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறாரே ?

முதலில் கிளப் என்ற வார்த்தையை தமிழ் படுத்த வேண்டும் பிறகு வேட்டி பற்றி யோசிக்கலாம். கூடவே ஒரு படம் இணைத்திருக்கிறேன். சும்மா பாருங்க.

தமிழுக்கும் வேட்டிக்கும் என்ன சம்பந்தம் ?

துணியை வெட்டி அணிவதால் அதற்கு பெயர் வேட்டி. மற்றபடி வெட்டி சண்டை போடுபவர்களுக்கும், சண்டையில் சுலபமாக இழுத்துவிட வேட்டி சிறந்த உடை அவ்வளவு தான்.

ஒரு டவுட் - கூடவே மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் என்ற பெயரை மாற்ற வேண்டுமா ?

மெட்ராஸ் மாகாணம்’ என்பதை ‘தமிழ்நாடு’ என மாற்றி இந்திய அரசு உத்தரவிட்டபோது‘ மெட்ராஸ் ஹை கோர்ட்’ பெயரை ‘தமிழ்நாடு ஹை கோர்ட்’ என மாற்றினால் வெளிநாடுகளில் குழப்பம் ஏற்படும் என்றார்கள்! இன்றும் இதே நீடிக்கிறது. மெட்ராசிற்கு மட்டுமா இது கோர்ட் ? தமிழ்நாட்டிற்கான ஹை கோர்ட் அல்லவா ? கேரளா ஹை கோர்ட் கர்னாடகா ஹை கோர்ட் என்பது போல தமிழ்நாடு ஹை கோர்ட்’ என்றறு முதலில் மாற்ற வேண்டும் பிறகு கிரிக்கெட் பக்கம் வரலாம்.


வேட்டி அணியும் பழக்கத்தை ஊக்குவிப் பதற்காக கோ-ஆப்டெக்ஸ் மூலம் வேட்டி தினம் கொண்டாடப்படுகிறது என்று ஸ்டாலின்
கூறியிருக்கிறாரே ?
வேட்டி தினமும் அணிந்தால் இந்த தினம் கொண்டாட தேவையில்லை !

தற்போது வேட்டி பிரச்சனை என்ன விளக்கவும் ?
கடந்த 11-ஆம் தேதி தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப்பில் முன்னாள் நீதிபதி அருணாசலம் எழுதிய நூல் ஒன்றின் வெளியீட்டு விழாவில் பங்கேற்கச் சென்ற உயர் நீதிமன்ற நீதிபதி அரி பரந்தாமனுக்கு அவர் வேட்டி அணிந்திருந்தார் என்பதற்காக அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர் விழாவில் கலந்துக்கொள்ளாமல் திரும்பினார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப் மற்றும் ஜிம்கானா கிளப், மெட்ராஸ் போட் கிளப் உள்ளிட்டவை மீது நடவடிக்கை எடுப்பதுடன், புதிதாக விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என வழக்கு போடப்பட்டுள்ளது.

நீதிபதி என்ன சொல்லியிருக்கிறார் ?

கிரிக்கெட் கிளப்பில் நடந்தது தனியார் பொது நிகழ்ச்சி. மாலை 5.30 மணிக்கு விழா நடைபெறுவதாக அழைப்பிதழில் அறிவிக்கப்பட்டு இருந்தது. நான் எனது அலுவலக காரில் மாலை 5.25 மணிக்கு சென்றேன். வேட்டி கட்டி இருந்ததால் அங்கிருந்த ஊழியர் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார். அதை கேட்டதும் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.
இந்த செயல் வியப்பாக உள்ளது. கிரிக்கெட் கிளப்பை உருவாக்கியபோது ஆங்கிலேயர்கள் அவர்களது ஆடை வரையறையை உருவாக்கி இருக்கிறார்கள். சுதந்திரத்துக்கு பிறகும் அதே ஆடை கட்டுப்பாட்டை தொடர்ந்து பின்பற்றுவதும், நமது பாரம்பரிய ஆடைகளுக்கு தடை விதிப்பதும் வியப்பாக உளளது என்றார்.

ஏன் ஆங்கிலேயர் வழக்கத்தை இன்னும் இந்த கிளப் விடவில்லை ? தப்புதானே ?

தப்பு தான். அதே போல ”மைலார்ட” என்று கோர்ட்டில் வாதாடுவதற்கு முன் சொல்லுவதும், கறுப்பு கோட் அணுவதும் ஆங்கிலேயர்கள் ஏற்படுத்திய பழக்கம்தான். இன்று கோர்ட்டுக்கு வக்கீல்களும், நீதிபதிகளும் வேட்டி அணிந்து கொண்டு செல்லலாமா ?

வேட்டி பற்றிய கோர்ட் கேஸ் என்னவாகும் ?

சட்டப்படி இது செல்லாது. தனியார் கிளப் களின் நிர்வாகத்தில் தலையீடுவது போல் ஆகும். அவர்களுடைய விதிகளுக்கு உட்பட விருப்பமில்லை என்றால் செல்ல வேண்டாம்.

வேட்டி கட்டிக்கொண்டு கிரிக்கெட் ?

வேஷ்டி அணிந்து கொண்டு தான் இனிமேல் சென்னையில் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றால் என்ன வெயிலுக்கு காத்து உள்ளே போகும் கூடவே பந்தும்.

கிளப் விளக்கம் என்ன ?

குடிபோதையில் வேட்டி கட்டியிருந்தால் கழன்று விழுந்து மானக்கேடாகி விடுமே என்பதற்காகத்தான் வேட்டி கட்டிக் கொண்டு வர தடை விதித்துள்ளோம். யார் வேண்டுமானாலும் எங்களது கிளப்புக்கு வரலாம். ஆனால் வேட்டி கட்டி வரக் கூடாது. வேட்டி கட்டினால் இங்கு வருவதைத் தவிர்த்து விடுங்கள்.


வேட்டி பிரச்சனை மாதிரி லுங்கி பிரச்சனை வருமா ?

ஏற்கனவே ஞாநி அதை செய்துவிட்டார். கமலா தியேட்டரில் அவர் மட்டும் லுங்கி கட்டிக்கொண்டு படம் பார்க்கலாம் என்ற சிறப்பு அனுமதி அவருக்கு உண்டு.

இது என்ன கலாட்டா ? எங்கிருந்து ஆரம்பித்தது ?

ஒரு கோவில் சுவரில் ‘இங்கே லுங்கி, நைட்டி அணிந்து வரக்கூடாது’ என்று போட்டிருந்ததை நான் ஃபேஸ்புக்கில் விமர்சித்தார். லுங்கி என்பது மதம் சார்ந்த உடை அல்ல. ஏழைகளின் உடை என்று போராடினார்.

ஞாநி போராட்டத்துக்கு வெற்றி கிடைத்ததா ?

தெரியாது ஆனால் அவருக்கு ஒரு லுங்கி இலவசமாக கிடைத்தது.

கோயில்களில் லுங்கி உங்க கருத்து ?

கோபால் சுப்பிரமணியம் பத்மநாபசுவாமி கோயில் சென்ற போது சட்டை இல்லாமல் வேட்டி அணிந்துக்கொண்டு தான் சென்றார். அப்போது எல்லாம் யாரும் பிரச்சனை செய்யவில்லையே ? பிடிக்கவில்லை என்றால் கோயிலுக்கு போகாதீர்கள்.

கட்சிக் கரை வேட்டிகள் பற்றி

அவை கறை வேட்டிகள். ’கறை நல்லது’ அதாவது மக்கள் நலனில் அக்’கறை’.

கடைசியாக உங்க கருத்து ?

சல்யூட் ராம்ராஜுக்கு சல்யூட்

Read More...